Tuesday, December 29, 2009

சில விஷயங்கள்....நாட் ஸோ இம்பார்டன்ட்

இதற்கு முந்தைய போஸ்ட் சிறிது சீரியஸ் ஆக இருந்து விட்டதால், இங்கே சில இலகுவான (லைட்டான ...தமிழாக்கம் சரிதானா?) விஷயங்கள்.

சமீபத்தில் கவனத்தைக் கவர்ந்த சில விஷயங்கள்:
  1. நோக்கியா E72
  2. ஸ்கோடா ஏடி (YETI) - ஜனவரி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்
  3. சேத்தன் பகத்தின் "டூ ஸ்டேட்ஸ்"
  4. EPLல் Chelsea முதலிடத்தில் இருப்பது
  5. விஜய்யின் படங்கள் வரிசையாகத் தோல்வி அடைவது
  6. குமுதத்தில் ஞானியின் தைரியமான கருத்துகள் ( சில கருத்துகள் மட்டுமே..)
  7. Wild Hoggs.. எத்தனையாவது முறை..?
  8. MS Office 2010 Beta - free download .. must try software
  9. புதிய தலைமுறை சஷி தரூருக்கும் முதிய தலைமுறை எஸ். எம். கிருஷ்ணாவுக்கும் இடையிலான ட்வீட்டர் சர்ச்சை
  10. காங்கிரஸின் சிறு பிள்ளைத் தனமான தெலுங்கானா அணுகுமுறை
அவ்வளவுதான்... நான் இன்னும் 2010 resolution முடிவு செய்யவில்லை. நீங்கள்..?

தமிழ் நாடும் பீகாரும்

என்ன நண்பர்களே, என்னடா இது, தமிழ் நாடு எங்கே பீகார் எங்கே ... எப்படியப்பா இரண்டையும் ஒன்றாக எழுதலாம்? இருங்க..இருங்க.. நான் எனது கருத்துக்கள் சிலவற்றைக் கீழே கூறியுள்ளேன். படித்துப் பாருங்கள்..பின் முடிவு செய்யுங்கள்..எனது தலைப்பு சரியா அல்லது தவறா?

பீகார் தேர்தல் வன்முறைகளிலும் ஊழல்களிலும் பேர் போனது என்பது இந்தியா முழுவதும் அறிந்த ஒன்று. ஆனால், நமது தமிழகத்தில் பாருங்கள்.. அறிவியல் பூர்வமான தேர்தல்கள். மக்களும் மகிழ்ச்சி... வெற்றி பெற்ற வேட்பாளர்களும் மகிழ்ச்சி..அதாவது ---- வாங்கியவரும் ---- கொடுத்தவரும் ...இரு தரப்பினரும் மகிழ்ச்சியாக உள்ளனர். தேர்தல் ஆணையமும் மகிழ்ச்சி...எந்த மாநிலத்தில் 80 விழுக்காடு வோட்டு பதிவு நடக்கிறது..

பீகாரில் ஆள் கடத்தல் என்பது ஒரு முக்கியமான தொழில்...தமிழகத்தில்.. மக்கள் பிரதிநிதிகளே அதை ஒரு தொழிலாக அங்கீகரித்துள்ளனர். அங்கே பெரும்பாலும் வயிற்றுப்பிழைப்புக்காக செய்கிறார்கள் ...இங்கே அங்கீகரிக்கப்பட்ட ஒரு சாரார் மட்டுமே தொழிலாக செய்கிறார்கள் செய்ய முடிகிறது...

நிதிஷ் குமார் தலைமையில் பீகார் சட்ட ஒழுங்கில் முன்னேறி வருகிறது என்று பேசிக் கொள்கிறார்கள். தமிழகத்தில்... சட்ட ஒழுங்கு என்பதை மக்கள் மறந்து சில பல ஆண்டுகள் ஆகி விட்டன என்று மதியிழந்த சிலர் கூறிக் கொண்டு உள்ளனர்.

பீகாரில் அரசு மக்களுக்கு எந்த உதவிகளும் செய்வதில்லையாம்.. வேலை செய்தால் தான் காசாம்... என்ன கொடுமை இது.. இங்கோ, அரசு சாப்பிட இலவச அரிசி, குடிக்க டாஸ்மாக் (இது மட்டும் இலவசம் இல்லிங்கோ ..) ஓய்வெடுக்கும்போது பார்க்க இலவச டிவி என்று எல்லா வித வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளது. இருந்தும் புத்தி ஜீவிகள் சிலர் அரசைக் குறை கூறுகின்றனர்.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்...ஆனால் இதன் பின்னரும் சிலர் அரசிடம் குறை கண்டு பிடிக்கலாம். எனது வேண்டுகோள் எல்லாம் ..அரசு அதை பொருட் படுத்தக் கூடாது என்பதுதான்...

வாழ்க தமிழகம்.. வளர்க தமிழனின் சுக போக வாழ்க்கை...

Friday, April 10, 2009

நீண்ட உறக்கம் திடீரென விழிப்பு

நீண்ட உறக்கம் - ஆம் ஒரு வருடத்துக்குப் பின் திடீரென விழிப்பு உண்டானது. நன்றிகள் பல டூ கொங்கு ராசா & திவ்யா. யதேச்சையாக இவர்களது வலைத்தளங்களைப் பார்க்க நேர்ந்தது. மிகவும் இயற்கையாக சரளமாக தங்களது எண்ணங்களை பதிவு செய்துள்ளனர். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

எங்களூரில் - பெங்களூருவில் தெரு நாய்களின் அட்டகாசம் தொடர்கிறது. அதைத் தடுக்க அரசாங்கம் முழு முயற்சி மேற்கொண்டுள்ளது. நம்புவோமாக ! சில தெரு நாய்கள் குழந்தைகளை வெறித்தனமாக தாக்கின. அதனால், கோபமடைந்த பொது மக்கள் இருபது நாய்களை அடித்துக் கொன்று விட்டனர். இன்று, ஒரு ஆங்கில நாழிதளில் பொது மக்களின் இந்த வெறிசெயலைக் கண்டித்தும் தெரு நாய்களின் உரிமை குறித்தும் ஒரு செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது. தெரு நாய்களுக்கு உள்ள உரிமை குழந்தைகளுக்கு கிடையாதா? எனது சிற்றறிவுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அனைத்து விலங்கு ஆர்வலர்களும் இரண்டு அல்லது ஐந்து தெரு நாய்களை தத்து எடுத்துக் கொள்ளலாம். அவர்களது உயர்ந்த லட்சியமும் நிறைவேறிய மாதிரி இருக்கும்; ஏழைக் குழந்தைகளும் உயிர் பிழைத்து இருப்பர்.

மூன்று நாட்கள் விடுமுறை. என்ன செய்யலாம்? பாதி பெங்களூரு வெளியூர் சென்று விட்டது - இந்த முறை இந்தியாவிற்குள்தான். ஹ்ம்ம்... இதே சென்ற வருடத்தின் போது, வெளிநாடு செல்ல அடிதடி நடந்தது. அதெல்லாம் ஒரு காலம் கண்ணு!

நாங்கள் எங்கும் செல்லவில்லை. எனக்கு விடுமுறை வருவதே வந்ததின் பின்னால் தான் தெரிகிறது. நான் திட்டமிடுதலில் அவ்வளவு திறமைசாலி !

சச்சினின் (தமிழ்த் திரைப்படம்) சில நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து ரசித்தேன். எத்தனையாவது முறை? நினைவில்லை. விஜய்யும் ஜெனிலியாவும் அழகான ஜோடி. விஜய்க்கு இந்த படம் வெற்றியடைந்திருந்தால் அவரது திரைப் பயணமும் வேறு திசையில் சென்றிருக்கும். பேரரசுவும் பிரபு தேவாவும் சிரமப் பட்டிருப்பார்கள். ஆனால் மக்கள் சிரமத்திலிருந்து தப்பித்திருந்திருப்பார்கள். விதியாகப்பட்டது வலியது ! ! !

நோக்கியாவின் புதிய ஈ வரிசை மொபைல் போனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம். வாழ்க மகிழ்ச்சியுடன்.